இலங்கை

இந்திய தேர்தல் – ஆட்சி மாற்றத்தை விரும்புகிறதா கொழும்பு ?

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று மே 23 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலை கொழும்பு அரசியல் தலைவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை ஆராய்ந்ததில் கிடைத்த விடயங்கள்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்புகளிடம் பேசியபோது இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்றை அவர்கள் விரும்புவதாக அறிய முடிந்தது

“ஏற்கனவே இந்திய அரசுடன் ஜனாதிபதி மைத்திரிக்கு சரியான ஒரு உறவு இல்லை . கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதில் மைத்ரி காட்டிய எதிர்ப்பு – அதன் பின்னர் அரசியல் நெருக்கடி கடந்த வருடம் ஏற்பட்டபோது இந்தியா ரணிலுக்கு வழங்கிய ஆதரவு என்பன அந்த உறவை பாதித்துள்ளது. புதுடில்லி – பிரதமர் ரணிலுடன் தொடர்பில் இருக்கிறது என சந்தேகிக்கிறார் மைத்ரி. அதனால் ஆட்சி மாற்றம் ஒன்றை இந்தியாவில் விரும்பும் மைத்ரி, மோடி அரசு மாறினால் வரும் புதிய அரசுடன் நெருக்கமாக பழகுவார். இங்கும் கூட அரசியல் முடிவுகள் பலவற்றை அவர் தைரியமாக எடுக்கக் கூடும்..”

என்று குறிப்பிடுகிறார் ஜனாதிபதி மைத்திரியின்
மூத்த ஆலோசகர் ஒருவர் .

மறுபுறம் ரணில் மோடி ஆட்சி தொடர்வதையே விரும்புவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் சொல்கின்றன.

“ சீனாவுடன் உறவு வைத்திருந்தாலும் இந்தியாவுடன் நெருங்கிப் பழகுகிறார் ரணில் . கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்கலாமென தெரிவித்து அதற்கு ஆதரவை வெளியிட்ட ரணில் பலாலி விமான நிலையத்தையும் மேம்படுத்த இந்தியாவை அழைத்தார்.எனவே அவரின் மீது இந்தியா மதிப்பு வைத்துள்ளது. மோடி ஆட்சி தொடர்ந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட அது உறுதுணையாக இருக்கும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன வேறு யாருக்கும் ஆதரவளித்துவிடாமல் இருக்க இந்தியாவின் ஊடாக அழுத்தம் கொடுக்கலாமென நினைக்கிறார் ரணில். ”
என்கிறார் ரணிலுக்கு நெருக்கமான ஒருவர்.

இந்திய ஆட்சியாளர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அங்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் இப்படியான எண்ணங்களுடன் தான் நோக்கப்படுகின்றன .

அதேசமயம் இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் தமிழர் பிரதேச அபிவிருத்தி திட்டங்களில் காங்கிரஸ் அரசை விட மோடி அரசே கூடுதல் அக்கறை செலுத்துவதாக தமிழ்த் தலைவர்கள் கருதுவது அவர்களிடம் பேசும்போது அறியமுடிந்தது.