உலகம்

இந்திய தேர்தலில் வாழ்ந்த, வீழ்ந்த வாரிசுகள்

இந்தியா முழுவதும் இந்த தேர்தலில், அரசியல் வாரிசுகள் என்ன ஆனார்கள் என்பது, மிகவும் சுவாரசியமான கேள்வியாக மாறிப்போயுள்ளது. சிலர் வெற்றியும் பலர் தோல்வியும் அடைந்துள்ளது தெரிய வருகிறது.

ராகுல் :


இந்திய அளவில் பிரபலமான வாரிசு அரசியல்வாதிகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் தலைவர் சோனியா. இவர்களில், கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி., அமேதியி்ல போட்டியிட்ட ராகுல், வயநாட்டில் முன்னிலை வகிக்கிறார். அமேதியில் பின்தங்கியுள்ளார். உ.பி.,மாநிலம் ரேபரேலி தொகுதியில் சோனியா முன்னிலை வகிக்கிறார். ராகுலின் குடும்பம், சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நேருவின் பரம்பரை அரசியல் வாரிசுகள்.

மேனகா :


இதே குடும்பத்திலிருந்து வந்த ஆனால், பா.ஜ., வில் போட்டியிடும் மேனகா மற்றும் அவரது மகன் வருண்காந்தி இருவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதில், மேனகா ஆயிரம் வாக்குகளில் தான் முன்னிலை பெற்றுள்ளார். பா.ம.க., தலைவர் ராமதாசின் வாரிசான அன்புமணி, தமிழகத்தின் தர்மபுரி தொகுதியில் முந்துவதும் பிந்துவதுமாக நுாலிழையில் தவிக்கிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமி, குறைந்த ஓட்டுகளில் முன்னணியில் உள்ளார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, வடசென்னை தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்தியன் மதுரை லோக்சபா தொகுதியில் பின்தங்கி உள்ளார்.

தமிழிசை :


முன்னாள் தி.மு.க., அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன், தென்சென்னை தொகுதியில் முன்னணியில் உள்ளார். பிரபல காங்., தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றொரு வாரிசு அரசியல்வாதியான கருணாநிதி மகள் கனிமொழியிடம் வெற்றியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளார்.

கார்த்தி சிதம்பரம் :


அ.தி.மு.க.,வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் தேனி தொகுதியில், முன்னிலை பெறுவதும், பின்னிலை பெறுவதுமாக உள்ளார். அதேபோல, காங்., தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தன், தென்சென்னையில் பின்தங்கியுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் பின்தங்கியுள்ளார்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி, கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.