விளையாட்டு

ஆறு வருடங்களின் பின்னர் சாதனை படைத்தது இலங்கைபாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேச போட்டியிலும், வெற்றிபெற்ற இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

லாஹூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, பானுக ராஜபக்ஷ 48 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஷெஹான் ஜயசூரிய தனது பங்கிற்கு, 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, தசுன் ஷானக 15 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்;டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாட் வசீம், வஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இமாட் வசீம் மற்றும் அசிப் அலி ஆகியோரது இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த போதிலும், இறுதியில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இமாட் வசீம் மற்றும் அசிப் அலி ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், 75 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.  எனினும், 47 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இமாட் வசீம் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில், நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும்இ இசுரு உதான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை  அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் இருபதுக்கு-20 வெற்றியை பதிவுசெய்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி தம்முடைய, முதலாவது இருபதுக்கு-20 தொடர் வெற்றியை பதிவு செய்தது.

இதேவேளை, இருபதுக்கு-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.