உலகம்

ஆப்கான் பல்கலைக்கழகத்தில் குண்டுத்தாக்குதல்;  19 மாணவர்கள் காயம்

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில்  அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 19 மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்களில் இருவர் கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கஸ்னி நகரில் அமைந்துள்ள கஸ்னி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பறைக்குள் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஆரப் நூரி தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பில் 12 மாணவிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த 13 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த  தாக்குதலுக்கு  இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான் குழு மாகாணத்தில் தீவிரமாக செயற்பட்டு வருவதுடன்இ அங்குள்ள பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி  வருகின்றது.

கடந்த மாதம்இ அதே பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான சிறியரக பேரூந்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், சாரதி உயிரிழந்ததோடு, ஐந்து மாணவர்களும் காயமடைந்தனர்.

இதேவேளை, கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் ஆப்கான் பாதுகாப்புப் படைத்துருப்புகளை ஏற்றிச் சென்ற, பேரூந்து மீது கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில், 10 பேர்  கொல்லப்பட்டதோடு, 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.