உலகம்

ஆப்கானில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 74 பேர் படுகொலைஓகஸ்ட் மாதம் முழுவதும் ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் சராசரியாக  74 (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) பேர்   கொல்லப்படுவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், அந்த நாட்டில் இடைவிடாத தொடரும் வன்முறைகளால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இடம்பெற்ற 611 தாக்குதல் சம்பவங்களால் குறைந்தது 2,307 பேர் உயிரிழந்துள்ள விடயத்தை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் 1,948 பேர் காயமடைந்துள்ளனர்

புள்ளிவிவரங்களுக்கு அமைய, தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கங்கமுமே தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர் போராளிகள் எனவும், எதிர்பார்த்ததை விட அதிகமான தலிபான் போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் கொல்லப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுமக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை இரத்து செய்திருந்தார்.

போர் நிறுத்தம் முறிவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கின்றனர், இந்நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக வன்முறைகள் மேலும் மோசமடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.