உலகம்

ஆப்கனில் அமெரிக்க ராணுவத் தளம் அருகே பல ஆண்டுகளாக வாழ்ந்தார் முல்லா ஒமர்: புத்தகத்தில் தகவல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் அருகே தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிறுவனரான முல்லா ஒமர் பல ஆண்டுகளாக வாழ்ந்தார் என்று புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இரட்டை கோபுர கட்டடங்களை அல் காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001ஆம் ஆண்டு விமானங்களை கடத்தி வந்து மோதி தகர்த்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அல் காய்தா தலைவர் பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி, ஆப்கானிஸ்தானை அப்போது ஆட்சி செய்த முல்லா ஒமரை அமெரிக்கா வலியுறுத்தியது. இதற்கு முல்லா ஒமர் செவிமடுக்கவில்லை. இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது 2001ஆம் ஆண்டு தாக்குதல் தொடுத்து, தலிபானை ஆட்சியில் இருந்து அமெரிக்கா அகற்றியது. இருப்பினும், முல்லா ஒமரும், பின்லேடனும் அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டனர். அவர்களில், பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாதில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லா ஒமர் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், நெதர்லாந்து பத்திரிகையாளர் பெத்தே டேம் என்பவர் “சியர்ச்சிங் ஃபார் அன் எனிமி’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், “பாகிஸ்தானில் முல்லா ஒமர் உயிரிழக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் ஜாபூல் மாகாணத்தில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் முல்லா ஒமர் பல ஆண்டுகளாக வாழ்ந்தார். பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து அவருக்குத் தெரியும். அவரது உடல்நிலை 2013இல் பாதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சைக்கு பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டார். பின்னர் ஜாபூலிலேயே இறந்து விட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை முன்னாள் தலைவரும் மறுத்துள்ளார். அதேநேரத்தில், டோகாவில் அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வரும் தலிபான் அமைப்பு பிரதிநிதிகள், “சியர்ச்சிங் ஃபார் அன் எனிமி’ புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து முல்லா ஒமரின் பாதுகாவலர் ஜப்பார் ஒமரியிடம் பேட்டி எடுத்து பெத்தே டேம் புத்தகமாக எழுதியுள்ளார்.
ஜப்பார் ஒமரிதான், முல்லா ஒமரை அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பச் செய்து, பாதுகாத்தார் என்று நம்பப்படுகிறது.