உலகம்

ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான வை .எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.

அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார்.

மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங்களிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் வை .எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக கூட்டணியில் கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்துவிட்டு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மத்தியில் பாஜகவுக்கு மாற்றாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஆனால் அனைத்தும் தற்போது வீணாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வென்றது. மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் வென்றது.

அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்ற ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களிடம் ஆதரவு திரட்டி கட்சியை வலுப்படுத்தினார்.

சந்திரபாபு நாயுடு

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தருவேன் என்று மக்களிடம் வாக்களித்தார்.

அதிரடி அரசியலுக்குப் பெயர்பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் களத்தில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அவர் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள், ஆந்திராவின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுகிறேன் என முழக்கமிட்டார். அனைத்துக்கும் மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர்.

ராஜகசேகர ரெட்டி முதல்வராக இருந்த காலத்தில் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்காமல் இருந்து வந்தார். இப்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தனது ஆட்சியை இழந்துள்ளார்.

நன்றி – தமிழ் இந்து