இலங்கை

ஆட்கொணர்வு மனுக்களின் ஆட்சேபனையை நிராகரித்தது யாழ்.மேல்நீதிமன்றம் – மனுதாரகளுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவு !

-யாழ்.செய்தியாளர் –

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார்.

“காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடி உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெருப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்தார்.

மனுதாரர்கள் அனைவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வரும் மே 24ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிட்ட மேல் நீதிமன்றம், அன்றைய தினம் வழக்கின் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை நீதிவான் வழங்குவார் என்று குறிப்பிட்டது.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் கட்டளைக்காக இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் முன்னிலையானார்.
முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார். அவருடன் அரச சட்டவாதி மாதினி விக்கேஸ்வரனும் முன்னிலையானார்