விளையாட்டு

அஸ்வின் செயலுக்கு குவியும் கண்டனங்கள் !

 

 

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்த ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.

அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் துடுப்பாட்ட மட்டையை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இப்படி ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

ராஜஸ்தான் றோயல்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் கெப்டனும் தற்போது அந்த அணியின் விளம்பரத் தூதருமான ஷேன் வோர்ன் அஸ்வினைக் கண்டித்து ட்விட்டரில்-

”ஒரு கெப்டனாகவும் மனிதராகவும் அஸ்வின் நடவடிக்கையைக் கண்டு வருந்துகிறேன். கண்ணியத்துடன் விளையாடுவதற்கு எல்லா கெப்டன்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். பந்தை வீச அவர் முயலவில்லை. எனவே இதை டெட் பாலாக அறிவித்திருக்க வேண்டும். இது ஐபிஎல் போட்டிக்கு நல்லதல்ல என பிசிசிஐயிடம் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்வின் செய்தது இழிவான செயல். ஐபிஎல்-லில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை ஐபிஎல் நிர்வாகம் மன்னிக்காது என எண்ணுகிறேன். ஒரு கெப்டனாக உங்கள் அணி எப்படி விளையாடவேண்டும் என்றொரு நடைமுறையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதுபோன்ற இழிவான செயலை ஏன் செய்யவேண்டும்? அஸ்வின், இந்தக் கீழான செயலுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள். என்ன செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் முதலில் மாறவேண்டும். கண்ணியத்துடன் விளையாடுவது தான் முக்கியமானது. கிரிக்கெட் விளையாடும் இளம் சிறுவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

இது இழிவான, சங்கடப்படுத்தும் செயலாகும். மேலும் விளையாட்டின் கண்ணியத்தையும் கெடுக்கிறது. இதுபோல விராட் கோலிக்கு பென் ஸ்டோக்ஸ் செய்தால் அது சரியா? அஸ்வின் என்னை ஏமாற்றியுள்ளார். அவரிடம் நியாயமும் தரமும் உள்ளது என எண்ணினேன். பஞ்சாப் அணி இதனால் பல ஆதரவாளர்களை இழந்துள்ளது, முக்கியமாக இளம் சிறுவர்களின் ஆதரவை இழந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என எண்ணுகிறேன்” என்று கூறியுள்ளார்.