இலங்கை

அவசரகால நிலையை காட்டி முள்ளிவாய்க்காலில் அரசு கைவைக்கலாம் – விக்கி முன்அறிவுறுத்தல்

– யாழ்.நிருபர் –
முள்ளிவாய்க்காலில் மக்கள் கூடி நின்றால் அவசரகால நிலைமைக்கு புறம்பானது என கூறி பாதுகாப்பு தரப்பினால் கைது செய்ய முடியும்.எனவே இவற்றையெல்லாம் நாம் பரிசீலிக்க வேண்டும்.மேலும் நாங்கள் எங்களது கட்சியுடன் நேரடியாக சென்று நினைவுகூரலை மேற்கொள்வோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபையில் நான் அதிகாரத்தில் இருந்த போது மூன்று ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நானே தலைமை தங்கினேன்.இந்த முறை என்னிடம் தலைமை தங்குமாறு யாரும் கேட்கவில்லை.அது பரவாயில்லை.ஏனெனில் நான்பதவி நிமித்தம் இருந்தபோது எனது தலைமையில் நடைபெற்றது.ஆனால் இம்முறை முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள பிரதேச சபையினரின் பொறுப்பில் நடைபெறலாம்.அத்துடன் உள்ளூர் மக்களும் இணைந்து அனுஷ்ட்டிப்பார்கள்.

அதுமட்டுமல்லாது பல கடசியினரும் தாங்களும் முள்ளிவாய்க்காலில் வெவ்வேறு இடங்களிலும் நினைவு கூரவுள்ளனர்.என்னை பொறுத்த வரையில் எனது கடசியும் இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளோம்.அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு நினைவு கூரவுள்ளோம்.தற்போதைய நாட்டு நிலைமையில் எந்தளவுக்கு இது சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை.

இதேவேளை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்க பல தரப்புக்களும் அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.