இலங்கை

அரச நிகழ்வுகளில் கலந்துகொள்ள கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ் வந்தார் ரணில் !

 

– யாழ்.செய்தியாளர் –

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை இன்று மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ்ப்பாணம் கோட்டையில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றிருந்தனர்.

யாழில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்தது.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக் கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைக்க உள்ளார்.

அதே போன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளார்.

இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ் வந்துள்ள பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் யாழ் ஜெற்விங் ஹோட்டலில் தங்கியுள்ளனர். பிரதமரின் யாழ் விஐயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் தங்கியுள்ள இடம் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களிலும் அதேபோல அவர் பயணிக்கும் இடங்களிலும் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.