Breaking News

அம்பாறையில் வைரஸ் தொற்று சந்தேக 43 பேரை வெலிக்கந்தைக்கு அனுப்ப நடவடிக்கை

 

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தப்பட்டவருடன் பழகிய 43 பேரை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்பகுதியில் உள்ள வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை(8) அன்று முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை(9) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து மத கடமைகளை முடித்த பின்னர் கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி இருந்தார். குறித்த நபருடன் இணைந்ததாக மேலும் 5 பேரை கொவிட் -19 பரிசோதனை செய்து அதன் அறிக்கைகளை பெற்றிருந்தோம் . அந்த அடிப்படையில் அந்த பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒருவரான இந்த குறிப்பிட்ட நபர் தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாங்கள் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் .அந்த குறிப்பிட்ட நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருந்த 20 பேரை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். அவரின் குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்ததாக சாரதி ஒருவரும் மற்றும் சாரதியின் உறவினர்கள் உட்பட குறித்த நபருடன் நேரடித் தொடர்புள்ள 9 பேரையும் நாங்கள் தனிமைப்படுத்தி இருக்கின்றோம். அந்த ஒன்பது பேரை ஆய்வுகூட பரிசோதனைக்காக இன்று அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் குறித்த பாதிக்கப்பட்ட நபருடன் இணைந்ததாக நேரடித் தொடர்புள்ள இரண்டாம் நிலையில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் 43 பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களையும் நாங்கள் தனிமைப்படுத்துவது அல்லது தடுப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு இருக்கின்றோம்.

நான் இன்று காலை ஜனாதிபதி செயலக பிரிவினருடன் கதைத்திருந்தேன் அத்துடன் கிழக்கு மாகாண இராணுவ தளபதியுடனும் பேசியிருக்கின்றேன். இதனடிப்படையில் ஒரு முடிவு எட்டப்படும் என நினைக்கின்றேன்.மேலும் சம்மந்தப்பட்டவர்களை அக்கரைப்பற்றில் உள்ள அவர்களது இல்லங்களில் தனிமைப் படுத்துவதா அல்லது ஒரு தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்துவதா என்கின்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கின்றது .தீர்வு ஏற்படும்பொழுது அதற்கேற்ப நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் .

மேலும் உண்மையில் இந்த தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்ட பிரதேசகம் அக்கரைப்பற்று என்ற ஒரு விடயத்தை ஒரு பூதாகரமான ஒரு விடயமாக பேசப்படுகிறது.இதில் நாங்கள் ஆபத்து நிறைந்த ஒரு நிலைமையாக கருதிக் கொள்ளக்கூடாது . நாங்கள் பொறுப்புமிக்கவர்களாகவும் சட்டம் சுகாதார நடைமுறைகளை மதித்து அவற்றிக்கு கட்டுப்பட்டவர்களாக இந்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை நூறுவீதம் சரியாக கடைபிடிக்க வைத்திய ஆலோசனைகளை செயற்பட வேண்டும்.பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்காக உழைக்க வேண்டும் இதை ஒரு அவசர செய்தியாக (பிரேக்கிங் நியூஸ்)பிரசுரிப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை .நாங்கள் அமைதியாக இந்த விடயங்களை மிகவும் திறமையாகக் கையாளவேண்டும் என்ற செய்தியை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இது தவிர இன்னொருவரிடம் நாங்கள் செல்லும்போது அவசர அவசிய விடயங்களுக்காக அவர்களை நெருங்கும் நேரத்தில் நாங்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் . வீட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்து விடுங்கள் இந்த தனிமைப்படுத்தல் உத்திகளை கடைப்பிடியுங்கள் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தபடும் நேரங்களில் நாங்கள் வீட்டில் முழுவதுமாக இருந்து இந்த சமூகத்துக்கு உறவுகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். ஆகவே இந்த சமூக இடைவெளி என்பது அல்லது தனிமைப் படுத்தப் படுகின்ற விடையம் நாங்கள் வீட்டுக்குள் எங்களது விளையாட்டுக்களில் பொது சுகாதார பழக்கவழக்கங்களை மேற்கொண்டு எம்மை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.