Breaking News

அமைச்சரவையில் தகராறு – ரவியின் கோரிக்கையை நிராகரித்தார் மங்கள !

 

மின் மற்றும் எரிசக்தி அமைச்சினை இடமாற்றம் செய்ய திறைசேரியில் இருந்து ரூ 364 மில்லியன் கோரி அமைச்சர் ரவி கருணநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக எதிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இது குறித்து நிதி அமைச்சு தனது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பத்திரம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆனந்த குமாரசாமி மாவத்தையில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சை நவம் மாவத்தையில் உள்ள கட்டிடம் ஒன்றுக்கு கொண்டுசெல்ல இந்த அமைச்சரவை அனுமதி கோரப்பட்டது.

இதற்கு நிதி அமைச்சினால் எந்த பணத்தையும் வழங்க முடியாது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியதாக அறியப்படுகிறது.

புதிய அலுவலகங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்ற முடிவை அமைச்சு எடுத்துள்ளதாகவும், மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் முன்மொழிவுடன் இதனால் உடன்பட முடியாது என்றும் சமரவீர கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

போதிய இடவசதி இல்லாததால் அமைச்சின் கட்டிடம் மாற்றப்பட வேண்டுமென மின் மற்றும் எரிசக்தி மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க இங்கு தெரிவித்தார்.

இதற்கிடையில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் அமைச்சர் மங்கள இறங்கியுள்ளதால் அதனை விமர்சிக்கும் அமைச்சர் ரவியின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.