Breaking News

அமைச்சரவையில் களேபரம் – மட்டக்களப்பு பல்கலை – மரணதண்டனை விவகாரம் சூடுபிடித்தன !

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டதாக அறியமுடிந்தது.

மட்டக்களப்பு கெம்பஸ் என்று சொல்லப்படும் சவூதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாக உயர்கல்வி அமைச்சுக்கு கீழே கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமருக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆனால் அது தனியார் முதலீடு என்பதால் அதனை உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதில் சிக்கல் நிலைமை உள்ளதாக பிரதமர் ரணில் இங்கு சுட்டிக்காட்டினார்.ஆனால் பிரதமரின் இந்தக் கருத்தால் கொதிப்படைந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததென தெரிவித்தார்.

அரசு இந்த விடயங்கள் தொடர்பில் செயற்படும் விதம் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட சம்பிக்க உடனடியாக மட்டக்களப்பு கெம்பஸ் விடயத்திற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டுமென பிரதமரை வலியுறுத்தினார்.

மரணதண்டனை விடயம் குறித்து இன்றைய அமைச்சரவையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்ரி , என்ன தடைகள் வந்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை அமுலாக்கம் தொடர்பில் அமைச்சர் மங்கள இதன்போது தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து இங்கு அமைச்சர் ராஜித கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சீன சிகரெட்டுகள் இலங்கை கொண்டுவரப்படுவதால் இப்படி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் அதற்கு தீர்வு சிகரெட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதல்ல- சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றுவதே என்று அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.