இலங்கை

அதிரடி கைதுகளால் அதிரும் கொழும்பு அரசியல் !

 

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் சி ஐ டியினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெவ் அலோசியஸின் வீடு சி டி யினரின் தீவிர சோதனைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவரும் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் உயர்மட்ட பாதுகாப்புத் தரப்புக்கள் ”தமிழன் ” செய்திச் சேவையிடம் தெரிவித்தன.

சி ஐ டியினரின் இந்த அதிரடி நடவடிக்கை பிரதமர் ரணில் மற்றும் அவரது அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதமர் ரணிலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் வருகிறது.அந்த அமைச்சுக்கு பொறுப்பானவர் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னதாக ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.