உலகம்

அசுத்தக் காற்று ஆயுளைக் குறைக்கிறது

 

காற்று மாசுபடுவதால் உலகளவில் 2017ஆம் ஆண்டு மட்டும் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. சுத்தமற்ற காற்று மனிதர்களின் ஆயுட்காலத்தை சராசரியாக ஓராண்டு எட்டு மாதங்கள் வரை குறைக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று , செயற்கைக்கோள் கருவிகளை பயன்படுத்தி, சுமார் 10,000 கண்காணிப்பு கருவிகளை வைத்து காற்று மாசு குறித்த தரவுகளை சேகரித்தது.

இதனை, காற்று மாசுவால் ஏற்பட்ட தாக்கங்களின் ஆதாரங்களோடு ஒப்பிட்டு, 2017ஆம் ஆண்டில் சுத்தமற்ற காற்றால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கணக்கிட்டது.

உடல் பருமனை விட காற்று மாசு உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்பட்டிருப்பதுடன், உலகளவில் அதிக கேடுகளை விளைவிக்கும் நோய்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டது. இதில் காற்று மாசு ஐந்தாவது இடத்தில் உள்ளது. உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோய் முதல் நான்கு இடங்களிலும், உடல் பருமன் ஆறாவது இடத்திலும் உள்ளது.

காற்று மாசுவால் நமக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதய நோய், சுவாச கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது.